Sunday 23 February 2014

அங்கோர்வாட்டும் தமிழர்களும்

இருபது லட்சம் மக்களை உள்நாட்டு யுத்தத்தில் பறிகொடுத்த கம்போடியா என்ற நாட்டின் களங்கத்தைப் போக்குவதைப் போன்று தென்கிழக்காசியாவின் பழமையான சரித்திரச் சான்றாக இன்று இருப்பது அங்கோர்வாட் என்ற பெருங்கோயிலாகும்.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடான கம்போடியாவிற்கு எந்த முதலீடும், எந்த வர்த்தகமும் இல்லாமல் அந்நியச் செலாவணியை அள்ளித் தருவது அங்கோர்வாட். அது இல்லையென்றால், பயணிகள் வருவதற்கு வேறு எதுவுமே இல்லையென்பதால், அங்கோர்வாட் கோயிலின் உருவம் அந்த நாட்டு தேசியக் கொடியில் இருக்கிறது. உலகிலேயே மிகப் பெரிய அற்புதமான அங்கோர்வாட் இந்துக் கோயிலையும், ஏனைய இந்து, பௌத்த கோயில்கள், அரண்மனை, மன்னர் மேடை, மிகப் பெரிய குளம் என 50-க்கும் மேற்பட்டதையும் கட்டியவர்கள் கெமர் எனும் மன்னர்கள்.
500 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து கம்போடியாவை ஆண்ட இந்த மன்னர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு கலைநுணுக்கமான கட்டடங்களைக் கட்டியிருக்கிறார்கள். அவற்றில் மிக முக்கியமானது அங்கோர்வாட். அதைப் பற்றி மேலைநாட்டு அறிஞர் ஒருவர் சொல்லும்போது, இந்தியா இல்லாமல் அங்கோர்வாட் கட்ட முடியாது. ஆனால் அது இந்திய நகரமன்று எனச் சொல்லியிருக்கிறார்.
கட்டடக் கலையில் ரோமர், கிரேக்கர்களுக்கு இணையாக, அதற்கும் மேலாக கீழ்த்திசையில் மிக அழகான நுணுக்கங்கள் காட்டும் அற்புதமான கட்டடங்களைக் கட்டுவித்த கெமர் மன்னர்கள் பலர் இந்துக்களாகவும், சிலர் பௌத்தர்களாகவும் இருந்திருக்கிறார்கள். தொடக்கத்தில் அங்கோர் உட்படப் பல இந்துக் கோயில்களைக் கட்டியவர்கள், பிற்பாடு பௌத்தக் கோயில்களையும் கட்டியிருக்கிறார்கள். அது நாட்டில் இருந்த பௌத்த மக்களுக்காக இருக்கலாம்.
சில மன்னர்கள் இரு மதங்களையும் ஆதரித்திருக்கிறார்கள். இந்து மதத்தை ஆதரித்த மன்னர்கள் சமஸ்கிருதத்தையும், பிராமணர்களையும் ஆதரித்திருக்கிறார்கள். பிராமணர்களே மன்னர்களுக்கு அரச குருவாக இருந்திருக்கிறார்கள். பௌத்த மதத்தை ஆதரித்தவர்கள் பௌத்தத் துறவிகளையும், பாலி மொழியையும் ஆதரித்தார்கள். சில மன்னர்கள் இரு பக்கத்தாரையும் சமமாக வைத்து அரசியல் நடத்தியிருக்கிறார்கள்.
கெமர் மன்னர்களுக்கு முன்பு கம்போடியா புனன் (Funan), சென்லா (Chenla) ஆகிய அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. இவர்களே முதன் முதலில் மன்னராட்சியை நிறுவியவர்கள் என்பதும், அவர்களும் இந்து சமயத்தவர்களே என்பதும் நிஜமானது. அவர்களுக்கு முன்னர் எந்த அரசும் கம்போடியாவில் இல்லாத போதும் மக்கள் இருந்தார்கள்.
ஆனால், அவர்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவோ, அதனை அறிந்தவர்களாகவோ இல்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால், இந்தியாவின் தொடர்பும் அப்போது இல்லை. மக்கள் நாடோடிகளாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் மதம் குறித்தத் தகவல் இல்லை. ஆனால், புத்த மதத்தின் பரப்புரை மக்களுக்குள் இருந்திருக்கலாம். பக்கத்து நாடுகளான சீனா, தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ் ஆகியவை புத்தமத நாடுகள் என்பதால், பௌத்தத் துறவிகள் கம்போடியாவிற்கு வந்து போயிருக்கலாம்.
எது எவ்வாராயினும் கம்போடியா இன்று ஒரு பௌத்த நாடு. கி.பி. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 5&ஆம் நூற்றாண்டு வரை கம்போடியாவை ஆண்ட புனன் மற்றும் சென்லா அரசுகள், அதற்குப் பிறகு கெமர் பேரரசு என்பன இந்து மதத்தைப் போற்றிய போதும் இன்று இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் கம்போடியாவில் இல்லை.
இதிலிருந்து கம்போடியாவை ஆண்ட மன்னர்கள் மட்டுமே இந்துசமயத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் வழித் தோன்றல்களாகும். அப்படியானால், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்? இக்கேள்விக்கான விடை மிகத் தெளிவாகக் கம்போடிய வரலாற்றில் இருக்கின்றது.
கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தென் பகுதியில் அப்போது புகழ்பெற்ற ஒரு பேரரசின் இந்து இளைஞன் கௌன்டின்யா (ரிணீஸீபீவீஸீஹ்ணீ). இவனை ஒரு பிராமணன் என்றும் ஒரு கம்போடியா புராணக் கதை சொல்கிறது. கடல் வழியே கம்போடியக் கடற்கரை வழியே வந்தபோது டிராகன் (பறக்கும் நாகம் அல்லது இறக்கையுள்ள முதலை) இளவரசி படகில் ஏறி அவனைப் பார்க்க முயன்றாள். அப்போது கௌன்டின்யா தன் மாய வில்லால் அவள் படகைத் தாக்கி, அவளை பயமுறுத்தித் தன்னைத் திருமணம் செய்யவைக்க முயன்றான். அவனுடைய அழகில் மயங்கிய இளவரசி, அவனை மணக்க விரும்பினாள்.
கௌன்டின்யா திருமணத்துக்கு முன்பு இளவரசிக்கு அழகான ஆடைகளைக் கொடுத்து அதற்குப் பதிலாக இளவரசியின் தந்தையிடம் எதையோ எதிர்பார்த்தான். இதை அறிந்த டிராகன் மன்னன் தன் மகளை கௌன்டின்யாவுக்குத் திருமணம் செய்வித்து நீர்சூழ்ந்த சதுப்பு நிலத்தைப் பரிசாகக் கொடுக்கும் முன்னர் அந்த நிலத்திலிருந்து நீர் முழுவதையும் குடித்தானாம.
நிலத்தைத் திருமணப் பரிசாகப் பெற்ற கௌன்டின்யா, அங்குத் தலைநகரமைத்து நாட்டிற்கு கம்பூஜா  என்று பெயரிட்டான். (இது கம்பூஜா தேசா என்ற சமஸ்கிருதத்திலிருந்து வந்ததாகும். பிறகு அது பிரெஞ்சில் கம்போட்ஜ் என்றாகி ஆங்கிலத்தில் கம்போடியாவாகியது) அவன் மணந்த பெண்ணின் பெயர் சோமா. (இன்றும் கம்போடியாவில் சோமா என்ற பெயர் பெண்களுக்கு உண்டு.) அவளை நாகி (ழிணீரீவீ) என்ற நாகலோகத்தின் இளவரசி என்றும் சொல்வர். இவையெல்லாம் புராணக் கதை போல் இருந்தாலும், இந்திய இளவரசன் ஒருவன் கம்போடியா வந்தது உண்மை.
கௌன்டின்யா – சோமா தம்பதிகளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் வளர்ந்து பெரியவன் ஆனதும், தன் தந்தையின் துணையோடும் அப்போது காஞ்சிபுரத்தில் ஆண்டு கொண்டிருந்த பல்லவர்கள் ஆதரவோடும் புனன் என்ற அரசை நிறுவினான்.
இதுதான் கம்போடியாவில் நிறுவப்பட்ட முதல் அரசாகும். 5-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து வந்த இரண்டாவது கௌன்டியா என்பவன் புனன் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றான். அவன் ஆண்ட காலம் முக்கியமானது எனச் சீனச் சரித்திரக் குறிப்புத் தெரிவிக்கின்றது. சீன மன்னன் வியட்நாமில் இருந்த சம்பாப் பேரரசை எதிர்த்துப் போரிட உதவி கேட்டு ஒரு தூதுக் குழுவையும், நாகசேன என்ற பௌத்தத் துறவி தலைமையில் புத்த மதத்தை அறிமுகம் செய்ய இன்னொரு தூதுக் குழுவையும் அனுப்பினானாம்.
ஆனால், புனன் ஆட்சியில் மகேஸ்வர வழிபாடு இருந்தது. புனன் மன்னன் தன்னை மலைகளின் பிரபு என அழைக்க வைத்தான். பிறகு அவன் தன் பெயருக்குப் பின்னால் வர்மன் என்ற பெயர் வரும் விதமாக ஜெயவர்மன் (அக்காலக் கட்டத்தில் தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தில் வர்மன் என்ற பெயர் கடைசியில் வரும் விதமான பல மன்னர்கள் ஆண்டார்கள். அவர்களே பல்லவர்கள்) என்ற பெயரைச் சேர்த்துக் கௌன்டின்யா ஜெயவர்மன் ஆனான். அவனோடுதான் அவனுக்குப் பிறகு வந்த மன்னர்கள் வர்மன் என்ற பெயர் கடைசியில் வரும் விதமாக அழைக்கப்பட்டார்கள்.
புனன் ஆட்சியிலும் அதற்குப் பிறகு வந்த சென்லா ஆட்சியிலும் சமஸ்கிருதம் செல்வாக்குப் பெற்றிருந்ததால், பிராமணர்கள் அரசோடு நெருக்கமாக இருந்திருக்கிறார்கள்.
அவர்களில் சிலர் அரசனின் ஆலோசகராகவும் குருவாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் தென்னிந்தியாவில் ஆண்டு கொண்டிருந்த பல்லவ நாட்டில் இருந்து வந்திருக்கிறார்கள். அப்படியாயின் காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவர்கள் யார்?
இதற்கு விடை கண்டால், கம்போடியாவில் ஆட்சி செய்த மன்னர்கள் யார் என்பது தெளிவாகும். பலர் ஆர்வப்போக்கில் அங்கோர்வாட்டைக் கட்டியவர்கள் தமிழ் மன்னர்கள் என்று எழுதியிருக்கிறார்கள். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய இனம் தமிழ் இனம் என்று பெருமையாகச் சொல்வது கவிதை மரபு. குமரிக் கண்டமே மாந்தரின் முதல் நிலம் என்பது ஆய்வாளரின் முடிவு. ஆனால், அதற்காக, அழகான கல்லைப் பார்க்கும் போதெல்லாம் அது தமிழ்க் கல், தமிழன் கல் என்பது தவறானது. அப்படித்தான் அங்கோர்வாட்டைக் கட்டியது தமிழர் என்பதாகும்.
அங்கோர்வாட்டைக் கட்டியது இந்தியாவிலிருந்து குறிப்பாக, தென்னிந்தியாவிலிருந்து வந்த பல்லவ வழித்தோன்றல்கள் என்பது தெளிவானது. ஆனால், பல்லவர்கள் தமிழர்கள் எனச் சொல்வதும் அவர்கள் வழிவந்த அங்கோர்வாட்டைக் கட்டிய கெமர் மன்னர்கள் தமிழர் என்பதும் சரித்திரச் சான்று இல்லாக் கருத்துக்களாகும். பல்லவர்கள் யார் என்பதற்கு ஆய்வுக்குரியவை பல உண்டு.
தமிழ்நாட்டில் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு முதல் 9&ஆம் நூற்றாண்டு வரையில் பல்லவர்கள் அரசாட்சி செய்தனர். இவர்களின் வரலாறு குறித்துப் பல்வேறு தகவல்கள் இருக்கின்றன. முற்காலப் பல்லவர்கள் வெளியிட்ட சாசனங்களின் மொழி மற்றும் அவற்றின் உள்ளடக்கங்களை வைத்து இவர்கள் இந்தியாவின் வட பகுதியிலிருந்து வந்த ஒரு பிராமணக் குடியினர் என்று சிலர் கருதுகிறார்கள்.
இந்திய வரலாற்று நூலாசிரியரான வின்ஸென்ட் ஸ்மித் என்பவர், தமது பழைய இந்திய வரலாறு என்ற நூலின் முதற் பதிப்பில் பல்லவர் என்பவர் பஹலவர் என்னும் பாரசீக மரபினர் என்றும், இரண்டாம் பதிப்பில் முதல் பதிப்பின் கருத்தை மறுத்து அவரே பல்லவர் தென்னிந்தியாவிற்கு உரியவர். அவர்கள் கோதாவரிக்கும், கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட வேங்கி நாட்டவராகலாம் என்றும், மூன்றாம் பதிப்பில் பஹலவர் என்னும் பல்லவர் என்னும் சொல்லோடு ஒப்பிட்டுப் பார்த்துப் பாரசீகர் எனச் சொல்வது தவறு; பல்லவர் தென்னிந்தியரே என முடிவு கூறியுள்ளார்.
ஆனாலும் ரைஸ் என்னும் ஆராய்ச்சியாளர் பஹலவர் மரபினரே பல்லவர் என்று கூறுகிறார். பேராசிரியர் துப்ராய் என்பவர் கி.பி. 150&இல் ருத்ரதாமன் என்னும் ஆந்திரப் பேரரசன் அமைச்சரான கவிராகவன் என்பவனே பஹலவன். அவன் மரபினரே ஆந்திரப் பேரரசு அழிவுறுங் காலத்தில் அதன் தென்பகுதியைத் தமதாக்கி ஆண்டவராவார். கிடைத்துள்ள பட்டயங்களில் காணப்படுபவர் முதற் பல்லவர் அல்லர். ஆந்திரப் பேரரசின் தென்மேற்கு மாகாணங்களை ஆண்டுவந்த சூட்டுநாகர் பெண்ணை மணந்து பட்டம் பெற்றவனே முதற் பல்லவன். அவனே பட்டயங்களில் கூறப்படுபவன் என்கிறார்.
இலங்கையில் சிறந்த ஆராய்ச்சியாளராக இருந்த ராசலிங்கம் முதலியார் என்பவர் இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள நயினா தீவு என இன்று அழைக்கப்படும் மணிபல்லவம் பல்லவர்களின் பிறப்பிடம் என்று மணிமேகலையில் ஒரு குறிப்பு ஆபுத்திரன் நாடு அடைந்த காதை என்ற பாடலில் இருக்கிறது.
நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன்
வாகை வேலோன் வளைவணன் தேவி
வாசமயிலை வயிற்றுள் தோன்றிய
பீலிவளை என்போள் பிறந்த அந்நாள்
இரவிகுலத்து ஒருவன் இணைமுலை தோயக்
கருவொடு வரும் எனக் கணி எடுத்து உரைத்தனன்
என்ற பாடலில் சொல்லப்பட்ட இரவிகுலத்து ஒருவன் என்பவன் சோ-ழன் நலங்கிள்ளி என்கின்றனர். அகநானூற்றில் இந்தச் சோழன் நலங்கிள்ளிக்கும் நாகர்குலக் கன்னிக்கும் பிறந்தவனைப் பற்றிய குறிப்பு உள்ளது. நாகர்குலக்கன்னி மணிபல்லவத்தைச் சேர்ந்தவளாவாள். அவளுக்குப் பிறந்தவனே இளந்திரையனாவான். இவன் தொண்டைமான் இளந்திரையன் என அழைக்கப்பட்டான். காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்ட அருவா நாட்டை ஆண்டவன்.
திரையன் என்பவன் திருப்பதியைத் தலைநகராகக் கொண்டு அருவாவடதலை நாட்டை ஆண்டவன். இளந்திரையன் திரையால் (கடல் அலையால்) கடத்தப்பட்டுக் கரை சேர்ந்தவன். தொண்டைக் கொடியால் உந்தப்பட்டு வந்தமையால், திரையன் என்றும், பிறகு அவனே பல்லவன் என்றும் அ-ழைக்கப்பட்டான்.
தொண்டை மண்டலத்துப் பழங்குடியினரான பள்ளிமரபினரே பிற்காலப் பல்லவர் என்றும் சொல்வர். ஆனால், இவற்றிக்கெல்லாம் உறுதியான ஆதாரங்கள் இல்லை. அதனால் வின்சென்ட் ஸ்மித் தனது நூலின் மூன்றாம் பதிப்பில் கூறியதே பெரிதும் பொருந்தும் எனத் தெரிகின்றது.
பிராகிருத மொழியில் வெளியிடப்பட்ட பல்லவப் பட்டயங்களோ, பிற கல்வெட்டுகளோ பல்லவர் பஹல மரபினர் என்றோ, வேறு நாட்டவர் என்றோ, மணிபல்லவத் தீவினர் என்றோ குறிக்கவில்லை. பல்லவர் பட்டயங்கள் அனைத்தும் பிராகிருத மொழியிலும், பெரும்பாலானவை வடமொழியிலும் இருக்கின்றன. பல்லவர் காலத்தில் வடமொ-ழி தொண்டை மண்டலத்தில் ஆட்சி செய்தது. பாரவி, தண்டி முதலிய வடமொழிப் புலவர்கள் பல்லவர்கள் ஆட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். நந்திக் கலம்பகம் எனும் நூல் நந்தி மன்னனைப் பற்றிப் பாடியதாகும். அதன் காலம் கி.பி. 847 முதல் கி.பி. 872 ஆகும். நந்தி மன்னன் பல்லவர்கோன் என அழைக்கப்பட்டான்.
மேலும் அவர்கள் தம்மை பாரத்வாச கோத்திரத்தார் என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறியுள்ளனர். அவர்கள் இந்து மதத்தினராகவும், சமஸ்கிருத மொழி போற்றுபவர்களாகவும் இருந்தனர். இவற்றையெல்லாம் பார்க்கிறபோது அவர்கள் தமிழர்கள் அல்லர். ஆனால், தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் என்பது உண்மையானது.
அந்த உண்மையின்படி பார்த்தால், கம்போடியாவில் அரசொன்றை நிறுவிய, உலகப் புகழ்பெற்ற அங்கோர்வாட்டைக் கட்டிய மன்னர்கள் பல்லவர்களின் வழித்தோன்றல்களே தவிர, அவர்கள் தமிழர்கள் அல்லர். நந்தி என்ற பல்லவ மன்னனே பாட்டுடைத் தலைவனாக நந்திக் கலம்பகத்தில் இருக்கிறான். அவனைப் பற்றியும், அவன் ஆட்சி பற்றியும், அவன் வீரம் குறித்தும் புலவன் தமிழில் எழுதியிருக்கிறான். ஆனால், கம்போடியாவை ஆண்ட மெகர் பேரரசு மன்னர்களைப் பற்றித் தமிழ் இலக்கியத்தில் எந்தக் குறிப்பும் இல்லை. ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் (காழகம் பர்மா என்பர்; இல்லை மலேசியக் கடாரம் என்பர்; எதுவானாலும் இரு நாடும் கடல் கடந்த நாடு) என்ற குறிப்புப் பட்டினப் பாலையில் வருகிறது.
இதுபோன்ற ஒரு குறிப்புக்கூட கம்போடிய இந்து அரசைப் பற்றியோ, அவர்கள் கட்டிய அங்கோர்வாட்டைப் பற்றியோ இலக்கியத்தில் இல்லை. இன்னும் சொல்லப்போனால், 18-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் அங்கோர்வாட் தமிழ் மக்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. இவ்வாறு பலவற்றைச் சீர்தூக்கிப் பார்க்கின்றபோது, கம்போடிய அரசாட்சியைத் தொடக்கியவர்கள், கெமர் பேரரசை நிறுவியர்கள் தமிழர்கள் அல்ல என்பது உறுதியானது போன்று அப்போது தமி-ழகத்தை ஆண்ட மன்னர்களின் பரம்பரையிலிருந்து கம்போடியா போனவர்கள் அவர்கள் என்பதும் உறுதியானது.
அங்கோர்வாட் கோயிலைப் பார்க்கின்ற போது, அதன் கட்டுமான அமைப்பு, சிற்பச் சிறப்பு, நுணுக்கம், அழகு என்பன கம்போடிய மண்ணுக்கு உரித்தானதன்று.
அவை கடல் கடந்து இறக்குமதியானதாகும். அங்கோர்வாட் கோயிலைப் பார்க்கின்றபோது மாமல்லபுரக் கடலோரக் கோயில் நினைவுக்கு வரும். அதனோடு இந்தியா இல்லாமல் அங்கோர்வாட் இல்லையென்று ஓர் ஆங்கிலேய அறிஞன் சொன்னதும் நினைவுக்கு வரலாம்.
கம்போடியாவில் முதலாவது அரசாட்சியைத் தொடங்கியவனுக்கும் பிறகு அடுத்தடுத்து வந்த மன்னர்களுக்கும் இந்தியாவோடு குறிப்பாகப் பல்லவ மன்னனோடு இருந்த உறவு பின்னிப் பிணைந்தது. இந்த உறவின் மூலம் கம்போடியாவிற்குச் சமஸ்கிருத மொழி வந்தது. பிராமணர்கள் வந்தனர். இந்துமதம் வந்தது. இந்துமதக் கோயில்களும் வந்தன. ஆனால், இந்தக் கோயில்களைக் கட்டியது கம்போடியச் சிற்பிகள் அல்ல. தமிழகச் சிற்பிகள்.
அங்கோர்வாட் கட்டடங்களின் கலைவண்ணத்தில் தமிழ்ச் சிற்பிகளின் கைவண்ணம் நிச்சயம் இருந்திருக்கும். காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னர்களின் உதவியில் தமிழ்ச் சிற்பிகள் நூற்றுக்கணக்கானவர்கள் கம்போடியா போயிருக்கிறார்கள்.
அவர்களின் கைவண்ணத்தில் அங்கோர்வாட் எனும் மாபெரும் சிற்ப மாளிகை உருவாகியிருக்கிறது. இன்று அது கம்போடியாவின் தேசியச் சொத்தாகவும், பண்டைக் காலத்து அதிசயமாகவும், நாட்டின் தேசியக் கொடிச் சின்னமாகவும் இருக்கிறது. இதுகுறித்துத் தமிழர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

- மாத்தளைசோமு,  info from: http://omsakthionline.com/?katturai=அங்கோர்வாட்டும்-தமிழர்க&publish=4685

காஞ்சிபுரம் ...


தமிழ்  கூறும் நல்லுலகில்  காஞ்சி ஒரு பழமையான நகரம். கல்வியில் சிறந்ததோர் காஞ்சி என்னும் வழக்குச் சொல்லிலிருந்தே இந்நகரின்  பெருமை புரியும். காஞ்சி என்ற சொல்லிற்கு அணிகலன் என்று பொருள் கொள்வர். முற்காலத்தில் இவ்வூர் கச்சி அல்லது கச்சிப்பேடு என்று அழைக்கப்பட்டுள்ளது. இதற்கு ”பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே !” போன்ற வரிகளே சாட்சி.
நகர நாகரிகங்கள் எப்பொழுதுமே  ஆற்றங்கரையிலேயே அமையும் என்பதற்கு எடுத்துக்காட்டாக,  இந்நகரும் பாலாற்றங்கரையில் செழிப்பான பகுதியில் அமைந்துள்ளது.  காஞ்சி மரங்கள் மிகுதியாக இருந்த ஊர்   என்பதால் இவ்வூர் காஞ்சி என அழைக்கப்பட்டிருக்கலாம். ஆற்றோர ஊர்கள் வெள்ளத்தால் தாக்கப்படுவதிலிருந்து காப்பாற்றும் மரங்களாய்க் காஞ்சி மரங்கள் இருந்திருக்கின்றன்.
இந்த நகரின் தோற்றம் பற்றிய குறிப்புகள் இல்லை என்றாலும் இதன் வயதை சுமார் 2500 ஆண்டுகளுக்கு கீழ் சொல்ல இயலாது. இளந்திரையான் என்னும் மன்னன் சுமார் 2000  ஆண்டுகளுக்கு முன்பு இந்த நகரை ஆட்சி செய்ததாக பரிபாடல் குறிப்புகள் இருப்பதாக அறிகின்றோம்.
இளந்திரையான் ஒரு சோழ இளவரசன் என்று பல கதைகள் இருப்பினும் அதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. சங்ககால அரசர்களில் ஒருவனாக அறியப்படும் இம்மன்னன் பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன். இவர் தொண்டைமான் இளந்திரையன் கச்சியோன் எனப் பாராட்டப்பட்டுள்ளான்.
கி.மு இரண்டாம் நூற்றாண்டில் பதஞ்சலி முனிவர் தனது சமஸ்கிருத நூலான மாபாடியத்தில்  காஞ்சி பற்றி குறிப்பிட்டுள்ளார். “கல்வியில் கரையில்லாத காஞ்சி” எனத் திருநாவுக்கரசரும், மகாகவி காளிதாசன் என்னும் வட நாட்டு கவிஞன் தனது காவியத்தில் “நகரேஷூ காஞ்சி” – “நகரங்களுக்குள் சிறந்த நகரம் காஞ்சி” எனக்  குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு புகழ் பெற்று இருந்தது.
மூவேந்தர்களுக்கு இணையாக தென்னிந்தியாவை பல்லவர்கள் காஞ்சியை தலைநகராக கொண்டு ஆண்டார்கள். இவர்களின் காலத்தில் கட்டிடக்கலை அதன் உச்சத்தை அடைந்தது.
இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்று இந்த நகரம்.  சோழ விஜய நகர முகலாய மன்னர்கள் ஆண்ட நகரம்.
பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆற்றை எல்லையாய்க்  கொண்டு, நிர்மாணிக்கப் பட்டதாக குறிப்புகள் உள்ளன.
கி.பி.ஏழாம் நூற்றாண்டில் (கி.பி.640) சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இந்நகரத்திற்கு பயணம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்கு பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் காஞ்சி நகரத்திற்கு கௌதம புத்தர் வருகை புரிந்தார் என்று கூறியுள்ளார். கி.மு.3 நூற்றாண்டில் அசோகரால் கட்டப்பட்ட ஸ்தூபிகள் பழுது பட்டுக் கிடந்தன என்றும் இந்நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட பவுத்த மடங்கள் இருந்தன என்றும், இவற்றில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பவுத்த துறவிகள் இருந்தனர் என்றும், இவையன்றி எண்பதுக்கும்  மேற்பட்ட இந்து சமணர் பள்ளிகள் இருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவரின் குறிப்புகளிள் காஞ்சியில் கடற்கரை இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வரலாற்று ஆசிரியர்களிடம் யுவான் சுவாங் வந்தது இந்த காஞ்சிதானா என்று குழப்பங்கள் நிலவுகின்றது. ஆனால் பெரும்பான்மையான  வரலாற்று ஆசிரியர்களின் முடிவாக காஞ்சிக்கு அருகிலுள்ள மல்லை கடற்கரையை காஞ்சியின் கடற்கரை என குறிப்பிட்டிருக்கலாம்  என ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கின்றது .
காஞ்சியை ஆண்ட பல்லவர்கள் ஈரான் நாட்டு வழி வந்தவர்களாக  இருக்கக்கூடும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதற்கான சான்றுகளும் போதுமான  அளவு நம்மிடம் இல்லை. பல்லவர்கள் ஆரியர்கள் என்றொரு குறிப்பு தெரிவிக்கின்றது. இதற்கான ஆதாரமும் நம்மிடம் இல்லை.  இந்துமத வளர்ச்சியில் இந்த நகரம் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. புலிகேசி காலத்தில் பௌத்த, சமண மதங்களுக்கு அரச அங்கீகாரம் கொடுக்கப்பட்டு இருந்தது. காஞ்சியின் மன்னன் நரசிம்ம பல்லவன் புலிகேசியின் சாம்ராஜ்யம் வீழ்ந்த பின்னர் தான், “இந்து மதம்” தலையெடுத்தது.  இந்த  நகரில் சமணமும் பவுத்தமும் பரவி இருந்தது. அப்போது இந்நகரம் சிவக்காஞ்சி, விஷ்ணுக் காஞ்சி , ஜீனக் காஞ்சி, பௌத்தக் காஞ்சி என்ற நான்கு பிரிவுகளாக இருந்தது. இன்று பெரிய காஞ்சிபுரம் சிவக்காஞ்சி எனவும். சின்னக் காஞ்சிபுரம் விஷ்ணுக் காஞ்சி எனவும், திருப்பருத்திக்குன்றம் சமணம் வளர்த்த ஜீனக் காஞ்சியாகவும், காமாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியே பௌத்தக் காஞ்சி யாகவும் இருந்திருக்கின்றன. ஆனால் தற்போது காஞ்சியில் பௌத்த அடையாளங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டது அல்லது மறைக்கப்பட்டுவிட்டது. அவற்றின் மிச்ச சொச்சங்கள் அகழ்வாராய்ச்சியிலேயே கிடைக்கின்றன.
புத்த மடங்கள் கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் ஐம்பெரும்  காப்பியங்களின் ஒன்றான மணிமேகலையிலும், பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் (கி.பி. 590-629) எழுதிய மத்த விலாசப் பிரகசனம் என்னும் நூலிலும், யுவான் சுவாங்  பயணக்  குறிப்புகளிலும் கிடைக்கப் பெறுகின்றன.
இளம் கிள்ளி என்னும் சோழ மன்னன் காஞ்சியைத்  தலைநகராக வைத்து ஆட்சி செய்தது மணிமேகலை வாயிலாக தெரிகின்றது.
ராசராசனின் தமையன் ஆதித்த கரிகாலன் இங்கு பொன் மாளிகை கட்டியதும், அதில் அவரின் தந்தையார் இறுதிகாலங்களில்   இங்கு வசித்து ”பொன்மாளிகை துஞ்சிய தேவன்” என்னும் கீர்த்தியில் இருந்தும் தெரிந்துக் கொள்ளலாம்.
6ம் நூற்றாண்டில் காஞ்சியில் இருந்து சென்ற பல்லவ இளவரசர் bodhidharumar சீனாவில் மருத்துவம் மற்றும் தற்காப்புக்கலைகளை பயிற்றுவித்ததாக தெரிகிறது.
சுமார் 4ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரை பல்லவர்கள் கட்டுப்பாட்டிலும்,10ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை சோழர்கள் கட்டுப்பாட்டிலும்  பின் விஜய நகர அரச கட்டுப்பாட்டிலும், பின் சுல்தான்கள்  கட்டுப்பாட்டிலும் அதன் பின்பு ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டிலும் இப்பொழுது தமிழக அரசு கட்டுப்பாட்டிலும் இருக்கின்றது.
ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இராபர்ட் கிளைவ் ஏகாம்பரநாதர் கோயிலை தனது கோட்டையாக பயன்படுத்திக் கொண்டார்.
இவர், வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு ஆபரணங்கள் பலவும் வழங்கி இருக்கிறார்.
முன்னாள்  தமிழக முதல்வர் அண்ணாதுரை,  காஞ்சியை சொந்த ஊராக  கொண்டவர்.