தமிழ் கூறும் நல்லுலகில் காஞ்சி ஒரு பழமையான நகரம். கல்வியில் சிறந்ததோர் காஞ்சி என்னும் வழக்குச் சொல்லிலிருந்தே இந்நகரின் பெருமை புரியும். காஞ்சி என்ற சொல்லிற்கு அணிகலன் என்று பொருள் கொள்வர். முற்காலத்தில் இவ்வூர் கச்சி அல்லது கச்சிப்பேடு என்று அழைக்கப்பட்டுள்ளது. இதற்கு ”பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே !” போன்ற வரிகளே சாட்சி.
நகர நாகரிகங்கள் எப்பொழுதுமே ஆற்றங்கரையிலேயே அமையும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இந்நகரும் பாலாற்றங்கரையில் செழிப்பான பகுதியில் அமைந்துள்ளது. காஞ்சி மரங்கள் மிகுதியாக இருந்த ஊர் என்பதால் இவ்வூர் காஞ்சி என அழைக்கப்பட்டிருக்கலாம். ஆற்றோர ஊர்கள் வெள்ளத்தால் தாக்கப்படுவதிலிருந்து காப்பாற்றும் மரங்களாய்க் காஞ்சி மரங்கள் இருந்திருக்கின்றன்.
இந்த நகரின் தோற்றம் பற்றிய குறிப்புகள் இல்லை என்றாலும் இதன் வயதை சுமார் 2500 ஆண்டுகளுக்கு கீழ் சொல்ல இயலாது. இளந்திரையான் என்னும் மன்னன் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நகரை ஆட்சி செய்ததாக பரிபாடல் குறிப்புகள் இருப்பதாக அறிகின்றோம்.
இளந்திரையான் ஒரு சோழ இளவரசன் என்று பல கதைகள் இருப்பினும் அதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. சங்ககால அரசர்களில் ஒருவனாக அறியப்படும் இம்மன்னன் பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன். இவர் தொண்டைமான் இளந்திரையன் கச்சியோன் எனப் பாராட்டப்பட்டுள்ளான்.
கி.மு இரண்டாம் நூற்றாண்டில் பதஞ்சலி முனிவர் தனது சமஸ்கிருத நூலான மாபாடியத்தில் காஞ்சி பற்றி குறிப்பிட்டுள்ளார். “கல்வியில் கரையில்லாத காஞ்சி” எனத் திருநாவுக்கரசரும், மகாகவி காளிதாசன் என்னும் வட நாட்டு கவிஞன் தனது காவியத்தில் “நகரேஷூ காஞ்சி” – “நகரங்களுக்குள் சிறந்த நகரம் காஞ்சி” எனக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு புகழ் பெற்று இருந்தது.
மூவேந்தர்களுக்கு இணையாக தென்னிந்தியாவை பல்லவர்கள் காஞ்சியை தலைநகராக கொண்டு ஆண்டார்கள். இவர்களின் காலத்தில் கட்டிடக்கலை அதன் உச்சத்தை அடைந்தது.
இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்று இந்த நகரம். சோழ விஜய நகர முகலாய மன்னர்கள் ஆண்ட நகரம்.
பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆற்றை எல்லையாய்க் கொண்டு, நிர்மாணிக்கப் பட்டதாக குறிப்புகள் உள்ளன.
கி.பி.ஏழாம் நூற்றாண்டில் (கி.பி.640) சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இந்நகரத்திற்கு பயணம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்கு பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் காஞ்சி நகரத்திற்கு கௌதம புத்தர் வருகை புரிந்தார் என்று கூறியுள்ளார். கி.மு.3 நூற்றாண்டில் அசோகரால் கட்டப்பட்ட ஸ்தூபிகள் பழுது பட்டுக் கிடந்தன என்றும் இந்நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட பவுத்த மடங்கள் இருந்தன என்றும், இவற்றில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பவுத்த துறவிகள் இருந்தனர் என்றும், இவையன்றி எண்பதுக்கும் மேற்பட்ட இந்து சமணர் பள்ளிகள் இருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவரின் குறிப்புகளிள் காஞ்சியில் கடற்கரை இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வரலாற்று ஆசிரியர்களிடம் யுவான் சுவாங் வந்தது இந்த காஞ்சிதானா என்று குழப்பங்கள் நிலவுகின்றது. ஆனால் பெரும்பான்மையான வரலாற்று ஆசிரியர்களின் முடிவாக காஞ்சிக்கு அருகிலுள்ள மல்லை கடற்கரையை காஞ்சியின் கடற்கரை என குறிப்பிட்டிருக்கலாம் என ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கின்றது .
காஞ்சியை ஆண்ட பல்லவர்கள் ஈரான் நாட்டு வழி வந்தவர்களாக இருக்கக்கூடும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதற்கான சான்றுகளும் போதுமான அளவு நம்மிடம் இல்லை. பல்லவர்கள் ஆரியர்கள் என்றொரு குறிப்பு தெரிவிக்கின்றது. இதற்கான ஆதாரமும் நம்மிடம் இல்லை. இந்துமத வளர்ச்சியில் இந்த நகரம் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. புலிகேசி காலத்தில் பௌத்த, சமண மதங்களுக்கு அரச அங்கீகாரம் கொடுக்கப்பட்டு இருந்தது. காஞ்சியின் மன்னன் நரசிம்ம பல்லவன் புலிகேசியின் சாம்ராஜ்யம் வீழ்ந்த பின்னர் தான், “இந்து மதம்” தலையெடுத்தது. இந்த நகரில் சமணமும் பவுத்தமும் பரவி இருந்தது. அப்போது இந்நகரம் சிவக்காஞ்சி, விஷ்ணுக் காஞ்சி , ஜீனக் காஞ்சி, பௌத்தக் காஞ்சி என்ற நான்கு பிரிவுகளாக இருந்தது. இன்று பெரிய காஞ்சிபுரம் சிவக்காஞ்சி எனவும். சின்னக் காஞ்சிபுரம் விஷ்ணுக் காஞ்சி எனவும், திருப்பருத்திக்குன்றம் சமணம் வளர்த்த ஜீனக் காஞ்சியாகவும், காமாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியே பௌத்தக் காஞ்சி யாகவும் இருந்திருக்கின்றன. ஆனால் தற்போது காஞ்சியில் பௌத்த அடையாளங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டது அல்லது மறைக்கப்பட்டுவிட்டது. அவற்றின் மிச்ச சொச்சங்கள் அகழ்வாராய்ச்சியிலேயே கிடைக்கின்றன.
புத்த மடங்கள் கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் ஐம்பெரும் காப்பியங்களின் ஒன்றான மணிமேகலையிலும், பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் (கி.பி. 590-629) எழுதிய மத்த விலாசப் பிரகசனம் என்னும் நூலிலும், யுவான் சுவாங் பயணக் குறிப்புகளிலும் கிடைக்கப் பெறுகின்றன.
இளம் கிள்ளி என்னும் சோழ மன்னன் காஞ்சியைத் தலைநகராக வைத்து ஆட்சி செய்தது மணிமேகலை வாயிலாக தெரிகின்றது.
ராசராசனின் தமையன் ஆதித்த கரிகாலன் இங்கு பொன் மாளிகை கட்டியதும், அதில் அவரின் தந்தையார் இறுதிகாலங்களில் இங்கு வசித்து ”பொன்மாளிகை துஞ்சிய தேவன்” என்னும் கீர்த்தியில் இருந்தும் தெரிந்துக் கொள்ளலாம்.
6ம் நூற்றாண்டில் காஞ்சியில் இருந்து சென்ற பல்லவ இளவரசர் bodhidharumar சீனாவில் மருத்துவம் மற்றும் தற்காப்புக்கலைகளை பயிற்றுவித்ததாக தெரிகிறது.
சுமார் 4ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரை பல்லவர்கள் கட்டுப்பாட்டிலும்,10ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை சோழர்கள் கட்டுப்பாட்டிலும் பின் விஜய நகர அரச கட்டுப்பாட்டிலும், பின் சுல்தான்கள் கட்டுப்பாட்டிலும் அதன் பின்பு ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டிலும் இப்பொழுது தமிழக அரசு கட்டுப்பாட்டிலும் இருக்கின்றது.
ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இராபர்ட் கிளைவ் ஏகாம்பரநாதர் கோயிலை தனது கோட்டையாக பயன்படுத்திக் கொண்டார்.
இவர், வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு ஆபரணங்கள் பலவும் வழங்கி இருக்கிறார்.
முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை, காஞ்சியை சொந்த ஊராக கொண்டவர்.
- சத்யா - Info from: http://www.panippookkal.com//ithazh/காஞ்சிபுரம்/
காஞ்சீபுரத்தைப் பற்றிய ஒரு பறவைப் பார்வையிலான கட்டுரை. அதிகமான, தேவையுள்ள செய்திகள். பல நூற்றாண்டு வரலாற்றை எடுத்துக்கூறிய விதம் நன்று.
ReplyDelete